(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
குவைட்டில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 54 பேர் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் இன்று காலை 06.45 மணியளவில் குவைட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான யூ.எல் – 230 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய கட்டணத்தை பெற்றுக்கொண்டு அவர்கள் தமது கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.
அந்தக் குழுவில் 54 வீட்டுப் பணியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பொலன்னறுவை, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிப்பவர்கள்.
ஒப்பந்த பணியிடங்களை விட்டு ஓடிப்போய் குவைட்டில் வேறு இடங்களில் அதிக ஊதியத்திற்கு நீண்ட நாட்களாக வேலை செய்து வருகின்றனர்.
பின்னர், சுகவீனம், இலங்கையில் வசிக்கும் அவர்களது குடும்பங்களில் எழும் பிரச்சினைகள், வயது வரம்பு மீறல் போன்ற காரணங்களால் இலங்கை திரும்ப எண்ணி குவைட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்திருந்தனர்.
பின்னர், தூதரக அதிகாரிகள் குவைட் அரசின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் மற்றும் நீதித்துறையுடன் இணைந்து தற்காலிக விமான அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து, அந்த நாட்டிலிருந்து இலங்கையர்களை நாடுகடத்தி இலங்கைக்கு திருப்பி அனுப்பினார்கள்.