(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரி எதிர்வரும் 30ஆம் திகதியன்று மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இப்போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்ட சங்கங்களும் இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.
மட்டக்களப்பு – கல்லடி பாலத்திருந்து எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பேரணி ஆரம்பமாகி, மட்டக்களப்பு – காந்தி பூங்கா அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியருகில் பேரணி நிறைவுபெற்றதும் அங்கு நீதி கோரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என கூறப்படுகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள், பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவ அமைப்புகள், தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
வடக்கு கிழக்கில் தமது உறவுகளுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்குத் தமிழ் தேசியப்பரப்பில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.