NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விண்கலம் !

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இதனிடையே நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதில் இந்தியா, ரஷ்யா இடையே போட்டி நிலவுகிறது. அந்த வகையில் இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு போட்டியாக ரஷ்யா கடந்த 10 ஆம் திகதி ‘லூனா-25’ என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு பல நாள் கழித்து விண்ணில் ஏவப்பட்ட போதிலும் ரஷ்ய விண்கலத்தை ‘சந்திரயான்-3’க்கு முன்பே நிலாவில் தரையிறக்க ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தது.

அதன்படி கடந்த 17 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷ்யாவின் ‘லூனா-25’ விண்கலம் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது.
தொடர்ந்து, படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன. அதன் தொடர்ச்சியாக ‘லூனா-25’ விண்கலம் இன்று (திங்கட்கிழமை) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்ததோடு விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை ரோஸ்கோஸ்மோஸ் மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘லூனா-25’ விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரோஸ்கோஸ்மோஸ் நேற்று தெரிவித்தது.

முன்னதாக விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் விண்கலத்துடனான தொடர்பை இழந்ததாகவும் ரோஸ்கோஸ்மோஸ் கூறியிருந்தது.

அதை தொடர்ந்து, விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்த நிலையில் ‘லூனா-25’ விண்கலம் கணிக்க முடியாத சுற்றுப்பாதையில் நகர்ந்து நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியதாக ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

Related Articles