NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் சபையின் யூத் லீக் தொடரில் பல தமிழ் பேசும் வீரர்கள் !

இலங்கை கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்திருக்கும் 17 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான யூத் லீக் (U17 Sri Lanka Youth League) கிரிக்கெட் தொடர் திங்கட்கிழமை (21) ஆரம்பமாகியிருந்தது.

மொத்தம் ஐந்து அணிகள் பங்கு பெறும் இந்த கிரிக்கெட் தொடரில் நாடு பூராகவும் உள்ள பாடசாலை கிரிக்கெட் தொடர்களில்  சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் இந்த தொடரில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகரினைச் சேர்ந்த அறபா வித்தியாலய மாணவரான அஹமட் அல் நஹ்யான் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். துடுப்பாட்ட சகலதுறை வீரரான அஹ்மட் நஹ்யான் இந்த தொடரில் விளையாட தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. நஹ்யான் தொடரில் கண்டி அணிக்காக ஆடவிருக்கின்றார்.

மறுமுனையில் வட மாகாணத்தினைச் சேர்ந்த ஜயஷ்சந்திரன் அஸ்னாத் மற்றும் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகிய வீரர்களும் இந்த தொடரில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். இதில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வீரரான அஸ்னாத் சைனமன் சுழல்வீரர் என்பதோடு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ரஞ்சித்குமார் நியூட்டன் சகலதுறை வீரராக காணப்படுகின்றார். இந்த இரண்டு வீரர்களும் தொடரில் தம்புள்ளை அணியினை பிரதிநிதித்துவம் செய்யவிருக்கின்றனர்.

மறுமுனையில் யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரி மாணவரான V. ஆகாஷ் தம்புள்ளை அணியில் வட மாகாணத்தில் ஆடும் மற்றுமொருவீரராக மாறியிருக்கின்றார்.

தம்புள்ளை, கண்டி அணிகள் தவிர தொடரில் காலி, கொழும்பு வடக்கு மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய அணிகளும் பங்கெடுக்கின்றன. தொடரின் போட்டிகள் கொழும்பு மூர்ஸ், SSC, புளூம்பீல்ட் மற்றும் NCC ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கின்றன.

இதில் தொடரில் முதற்கட்டமாக குழுநிலைப் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு குழுநிலைப் போட்டிகளின் புள்ளிகளுக்கு அமைய இரண்டு அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படவிருக்கின்றன. தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 29ஆம் திகதி NCC மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles