NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய பயிற்சிநெறி!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

“குழந்தை பிறந்தது முதல் 18 வயது வரை சிறுவர்களாகவே அவர்கள் கருதப்படுகின்றார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என்பன தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் எமது அரசாங்கமும் இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருவதுடன் பெண்கள் மற்றும் சிறுவர்களின் மேம்பாடு தொடர்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்படுகிறன.

அதன்படி, ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே அந்தக் குழந்தையின் போசாக்கு குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், குறை போசாக்குள்ள கர்ப்பிணித் தாய்மார்கள், போசாக்கான உணவைப் பெறுவதற்கான கொடுப்பனவு அட்டை வழங்கும் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், பிரதேச செயலக ரீதியில் இந்தச் செயன்முறை முன்னெடுக்கப்படுவதாகவும். ஒவ்வொரு அரச தாய் – சேய் நல மத்திய நிலையங்களில் பதிவு செய்த, கர்ப்பிணித் தாய்மார்களுக்காக அங்கு நடைபெறும் கிளினிக்களுக்கு வருகை தருகின்றவர்களில் போசாக்குக் குறைபாடு உள்ளவர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்களுக்கு இந்தக் கொடுப்பனவு அட்டை வழங்கப்படும். இந்த வருடத்திற்கு மாத்திரம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொடுப்பனவு அட்டை வழங்குவதற்காக அரசாங்கம் 11 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.  

அதேபோன்று, பாடசாலை செல்லும் மாணவர்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு போசாக்கான காலை உணவை வழங்கும் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலும், இயலுமான வரை சிறுவர்களின் உணவு, சுகாதாரம், கல்வி போன்ற விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் இந்நாட்டில் இயங்கும் முன்பள்ளிகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுவர்களின் கல்வி மாத்திரமன்றி அவர்களுடன் பேணப்பட வேண்டிய உறவு மற்றும் அவர்களின் பாதுகாப்பு, தொடர்பிலும் அவசியமான பயிற்சிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், முன்பள்ளிகள் இயங்கும் சூழல், ஆசிரியர்களின் தகைமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. அது தொடர்பில் சட்ட வரையறைகளை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம. 

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களின் கல்வித் தகைமை மாத்திரமன்றி பல வருடகால அனுபவத்தின் ஊடாக சிறப்பாக முன்பள்ளிகளை நடத்திவருபவர்களையும் இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் கல்வித் தகைமை மற்றும் பயிற்சி பெற்ற ஒருவருடன் அனுபவமிக்க ஆசிரியர்களையும் ஒன்று சேர்த்து இந்த முன்பள்ளிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

“இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் பாடசாலை மட்டத்தில் சிறுவர்களை தெளிவூட்டுவது குறித்து பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் மாத்திரமன்றி சிறுவர்களுக்கு நிகழும் எந்தவொரு துஷ்பிரயோகம் தொடர்பிலும் அவர்கள் தமது பெற்றோரிடம் முறையிடத் தயக்கம் காட்டுகின்றனர். எனவே சிறுவர்கள் அதிகளவில் தமது நேரத்தைக் கழிப்பது பாடசாலைகளில் என்பதனால், பாடசாலைகளில் சிறுவர் உளவளத்துணை ஆலோசகர்களை நியமித்தல் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. சில பெண்கள் தங்களுக்கு இடம்பெற்ற துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட விரும்புவதில்லை. எல்லோர் முன்னிலையிலும் இவ்விடயங்கள் குறித்து கூறுவதற்கு பெண்கள் வெட்கப்படுகிறார்கள். அந்த வகையில், இவ்வாறான முறைப்பாடுகளை விசாரிக்கவென பொலிஸ் நிலையங்களில் தனியான அறைகளை ஒதுக்குவதுடன் தனியான மகளிர் பொலிஸாரையும் நியமிக்க வேண்டும். 

எனவே, அத்தகைய பெண்களைக் கையாள்வதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியுள்ளதுடன் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படவும் வேண்டும். மேலும், பெண்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் கொலைகள் தொடர்பாக, ஊடக நிறுவனங்கள் செய்திகளை வெளியிடும்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுய ஒழுக்கத்தின் கீழ் செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்தார்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles