நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட 37 கண் பார்வை சிகிச்சைகளில் 17 பேருக்கு பார்வையில் சிக்கல்கள் காணப்பட்டதாகவும், இருவர் கண் பார்வையை இழந்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அரச வைத்தியர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (31) அரச வைத்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கண்சிகிச்சை நிபுணர் வைத்தியர் கனிஷ்க,” சமூக வலைதளங்களில் பல தகவல்கள் கிடைத்தாலும், உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வர பலர் அஞ்சுவதைக் கருத்தில் கொண்டு, இது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படுத்துகிறோம்.
வைத்தியர்களால் கண்களில் வைத்த மருந்து தவறானது என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். இதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்க முடியாது. அதற்கு தற்போதைய அரசாங்கமே முதன்மையான பொறுப்பு. அரசின் நலனுக்காக தரம் குறைந்த மருந்துகள் கொண்டு வரப்படுகின்றன. அவசர கொள்முதல் விலையில் பல வகையான மருந்துகள் கொண்டு வரப்படுகின்றன.அவற்றில் பெரும்பாலானவை தரம் குறைந்த மருந்துகள். அவற்றில் ஒன்று தான் ப்ரெட்னிசிலோன் கண் மருந்து.
இனிமேல் இதுபோன்ற தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வைத்தியர்கள் என்று சொன்னாலும் சில இடங்களில் மன நோயாளிகள் போலத்தான் இருக்கிறோம். எங்களை அந்த நிலைக்கு தள்ளியது அரசாங்கம் தான்.
உரிய சிகிச்சை அளிக்கப்படாததாலும், வசதிகள் செய்து தரப்படாததாலும் வைத்தியர்கள் அதிக அளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதன்பின், மீதமுள்ள வைத்தியர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வைத்தியர்கள் செய்ய வேண்டியுள்ளது.அந்த சூழ்நிலையால், நீங்கள் மிகவும் அழுத்தத்தில் இருக்க வேண்டும். அப்போது சுதந்திரமான மனதுடன் வேலை செய்ய இயலாது.
இது இப்படியே நீடித்தால் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்து, நாட்டின் சுகாதாரத் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை கடைசித் துளியாகக் குறையும்.கண் வைத்தியசாலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் எந்த நிவாரணமும் வழங்கவில்லை.
மேலும், இழப்பீடு வழங்கப்பட்டும் கண் பார்வை திரும்பவில்லை என்றால், அந்த இழப்பீடு எவ்வளவு காலம்? அந்த அப்பாவி மக்களுக்கு இழப்பீட்டுத் தொகைக்கு அப்பாற்பட்ட ஒன்றை வழங்குவது கட்டாயமாகும்.” என தெரிவித்தார்.