பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத் உயிரிழந்து ஒருவருடம் பூர்த்தியாகின்றது. சுமார் 70 ஆண்டுகளாக பிரித்தானியாவின் மகாராணியாகத் திகழ்ந்து வந்த அவர் கடந்த ஆண்டு, தனது 96 ஆவது வயதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனையடுத்து பிரித்தானியாவின் மன்னர் மற்றும் ராணியாக ராணி எலிசபெத்தின் மகனான மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா, கடந்த மே மாதம் ஆறாம் திகதி முடிசூடிக்கொண்டனர்.
இந்நிலையில் மன்னர் சார்லஸ் தனது தாயின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்ந்துள்ளதோடு, கடந்த 1968 ஆம் எடுக்கப்பட்ட ராணியின் புகைப்படமொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ”பிரித்தானிய மக்கள், இவ்வாண்டு எனக்கும் எனது மனைவிக்கும் காட்டிய அன்பு மற்றும் ஆதரவிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், உங்கள் அனைவருக்கும் என்னால் முடிந்த அனைத்து சேவையையும் செய்வேன் ” எனவும் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.