பயணிகளின் பாதுகாப்பு கருதி புறக்கோட்டை மற்றும் மருதானை ஆகிய புகையிரத நிலையங்களில் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவசியம் ஏற்படும் நிலையில், ஏனைய புகையிரத நிலையங்களுக்கும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக புகையிரத நிலையங்களில் பல்வேறு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, புகையிரத நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இன்று காலை முதல் சுமார் 40 அலுவலக புகையிரத சேவைகளை முன்னெடுப்பதற்கு இரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன், அலுவலகத்திற்கு செல்லும் பயணிகளின் தேவை கருதி வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயண நடவடிக்கையினை முன்னெடுக்கும் இரவுநேர அஞ்சல் புகையிரதத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், புகையிரத என்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கத்தின் போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில், இன்று வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்புவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அலுவலக இரயில் உட்பட 13 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புகையிரத சேவை உடனடியாக அமுலாகும் வகையில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
இருப்பினும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் பணிப்புறக்கணிப்பு தொடரும் என புகையிரத என்ஜின் இயக்க பொறியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தொடர்ந்து ஏனைய தரப்பினரும் தம்முடன் இணைந்துகொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று மாலை 6 மணிவரை சுமார் 120 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.