(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்கள் நடந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அந்த தரப்பினரைக் கட்டுப்படுத்தி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
பொருட்களை திருடிய குற்றத்திற்காக சட்டத்திற்கு மாறாக எவரையும் தாக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தத்தமது நிறுவனத்தில் ஏதேனும் பொருட்கள் திருடப்படுவதைக் கண்டால், பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் மூலம் திருடிய நபரைக் கட்டுப்படுத்தி பொலிஸாருக்குத் தெரிவிக்க வேண்டும். எனினும் தாக்குதல் நடத்த இயலாது. தாக்குதல் நடந்தால், அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் சந்தேக நபர்களாக கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும்.
இவ்வாறான நிறுவனங்களின் முகாமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.