(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய இடங்களுக்கு இடையில் உள்ள ரங்கொட பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக நான்கு பாதைகளும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொட்டாவையிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதுவ நுழைவாயிலில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், அந்த வாகனங்கள் காலி – தெனிய, மாதம்பே வீதியூடாக பயணித்து இமதுவ நுழைவாயிலுக்குத் திரும்புவதன் மூலம் அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஹம்பாந்தோட்டையில் இருந்து கொட்டாவ நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் இமதுவ நுழைவாயிலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுடன், காலி – தெனியா – மாதம்பே வீதியில் பயணித்து பின்னதுவ நுழைவாயிலில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.