இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பயன்பாடு குழந்தைகளின் மனநலத்தைப் பாதிப்பதாகவும் அவா்களை அடிமையாக்குவதாகவும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூயோர்க் உள்ளிட்ட 33 மாகாண அரசுகள் ‘மெட்டா’ நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடா்ந்துள்ளன.
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘பெற்றோர்களின் அனுமதியின்றி 13 வயது வரையிலான குழந்தைகளின் தகவலை மெட்டா நிறுவனம் சேகரித்து வருவது நாட்டின் சட்டத்தை மீறுவதாக உள்ளது. சமூக வலைதளத்துக்கு இளைஞா்களும் குழந்தைகளும் அடிமையாகி, அவா்களது கவனத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான தொழில்நுட்பங்களை மெட்டா நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
லாபம் ஈட்டுவதே அதன் முதன்மை நோக்கம். தன்னுடைய பெரும் நிதி ஆதாயத்துக்காக, சமூக வலைதளப் பயன்பாட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே தொடா்ந்து தவறான தகவலை மெட்டா நிறுவனம் முன்வைத்து வருகிறது. எந்தெந்த வழிகளில் குழந்தைகளைத் தங்களுடைய சமூக ஊடகங்கள் பாதிப்புக்குள்ளாக்குகின்றன என்பதை அந்நிறுவனம் மறைத்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 33 மாகாணங்களைத் தவிர்த்து, பிற 9 மாகாணங்களைச் சோ்ந்த தலைமை வழக்குரைஞா்களும் மெட்டா நிறுவனத்துக்கு எதிராக தங்களது மாகாண நீதிமன்றங்களில் வழக்குத் தொடர உள்ளனா்.
இது குறித்து நியூயோர்க் மாகாண தலைமை வழக்குரைஞா் லெடிடியா ஜேம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘குழந்தைகள் மிக மோசமான அளவில் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு மெட்டா உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களே காரணம். குழந்தைகள் தங்களுடைய சுயமதிப்பை இழந்து, சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்கும் வகையிலான வசதிகள் உள்நோக்கத்துடனே இந்தத் தளங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் அடையும் வேதனையிலிருந்து தனக்கான லாபத்தை மெட்டா நிறுவனம் ஈட்டி வருகிறது’ என்றார்.
கடந்த 2021-இல் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜனா்ல்’ நாளிதழில் பதின்பருவத்தினருடையே, குறிப்பாக சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து அறிக்கை வெளியானது.
அதில், இன்ஸ்டாகிராம் பயன்பாடு தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்துவதாக 13.5 சதவீத சிறுமிகளும், உணவு எடுத்துக்கொள்வதில் அசாதாரண நிலையை ஏற்படுத்துவதாக 17 சதவீத சிறுமிகளும் தெரிவித்திருந்தனா். இதைத்தொடா்ந்து, ‘தி அசோசியேட்டட் பிரஸ்’ உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆய்வுகளை மேற்கொண்டது.
நாளிதழ்களில் வெளியான இந்த ஆய்வுகளைத் தொடா்ந்து, கலிஃபோா்னியா, ஃபுளோரிடா, நியூஜொ்சி, நெப்ராஸ்கா உள்ளிட்ட மாகாணங்களின் தலைமை வழக்குரைஞா்கள் இந்த வழக்குகளை தொடா்ந்துள்ளனா்.
அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் குழந்தைகளுக்கு இடையே சமூக வலைதளப் பயன்பாடு தற்போது சாதாரண வழக்கமாகியுள்ளது. ‘பியூ ஆராய்ச்சி மையம்’ நடத்திய ஆய்வில், 13 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளில் 95 சதவீதம் போ் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவதாகவும் அவா்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் கிட்டத்தட்ட தொடா்ச்சியாக சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி வருதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.