கடந்த 2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தைஇ கத்தோலிக்க திருச்சபையின் தொலைத்தொடர்பாடல் இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் உள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் என்னை தொடர்புகொண்டு நாடாளுமன்றத்தில் ரவூப்ஹக்கீமின் உரை குறித்த கத்தோலிக்க திருச்சபையின் அதிருப்தியை வெளியிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார் என பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக தன்னிடம் கர்தினால் தெரிவித்தார் என ரவூப்ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது உண்மையில்லை என என யூட் கிருசாந்த பெர்ணான்டோ கத்தோலிக்க திருச்சபை சார்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், ”பாராளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மக்களை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார் என கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்ரேலிற்கு உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புள்ளதாக கர்தினால் எவருக்கும் தெரிவிக்கவில்லை.
சமீபகாலத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களையோ அல்லது வேறு எந்த அரசியல் தலைவர்களையோ கர்தினால் சந்திக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில காலம் அவர் அரசியல் தலைவர்களை சந்தித்தார்.
இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொள்ளவில்லை, அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்ட சிறிய பயங்கரவாத குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பது மாத்திரமே கர்தினால் தெரிவித்த ஒரேயொரு விடயம்.
எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இந்த தாக்குதலுடன் சர்வதேச காரணிகள் தொடர்புபட்டிருக்கலாம். ஆனால் நிச்சயமாக இஸ்ரேலிற்கும் இதற்கும் தொடர்பில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.