சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டணியின் கீழ் சுகாதார சேவையில் ஈடுப்படும் 11 சங்கங்கள் இணைந்து “20,000/= வெற்றிக்கொள்ளும் ஒன்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்”எனும் தொணியில் 09 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் ஒரேநாளில் இரண்டு வகை போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று (01.11.2023) காலை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவை சங்கங்கள் அறிவித்துள்ளன.
அந்த வகையில் இந்த போராட்டத்தில் காலை 8.30 மணிமுதல் மதியம் 12 மணிவரை அடையாள வேலை நிறுத்தம் முதல் போராட்டமாகவும் 12 மணிக்கு வைத்தியசாலை வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டமும் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தொழிற்சங்க பேதங்கள், கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வெற்றி பெறச் செய்யும் இலக்குடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக போராட்டம் தொடர்பில் விணியோகிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்போராட்டத்தில் கோரிக்கைகளாக
- அனைத்து ஊழியர்களின் சம்பளத்தை 20,000/=ரூபாயாக உயர்த்து,
- சுகாதார பணியாளர்களுக்கு ஐந்து நாள் வாரத்தை பெற்றுக் கொடுத்தல்,
- மத்திய அரசாங்கத்தின் மாகாண மற்றும் சுகாதார நிறுவனங்களின் அனைத்து மணியாளர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு, விடுமுறை நாள் சம்பள எல்லைகளை அகற்றுதல்,
- மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக றேட் முறை ஒன்றை பெற்றுக் கொடுத்தல்,
- தற்போது வழங்கப்படும் 1000/= ரூபாய் சிறப்பு கொடுப்பனவை 7000/=ரூபாயாகவும்,சீருடை கொடுப்பனவை 15000/=ரூபாயாக அதிகரிப்பு செய்தலும்,
- ஊழியர் வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்தல்,அனைத்து பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்,
- மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்தல்,வழமையான முறையில் அறுவை சிகிச்சைகளை செய்தல்,
- முறையான இடமாற்றம் முறைகள் மற்றும் இடமாற்றங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளல்,
பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் ,சமூக ஊடக பயங்கரவாத சட்டத்தை உடனடியாக சுருட்டி கொள்ளல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வெற்றி கொள்வதற்கு
- இலங்கை குடியரசு சுகாதார சேவைகள் சங்கம்,
- இலங்கை சுதந்திர சுகாதார ஊழியர் சங்கம்,
- சுகாதார சேவைகள் “அரக்கெமி”சங்கம்,
- தென்மாகாண “சுவமிதுரு” சுகாதார சங்கம்,
- இலங்கை சுதந்திர உபஸ்தாயக்க சங்கம்,
- சுவசேவா ஐக்கிய தொலைபேசி செயற்பாட்டாளர்கள் சங்கம்,
- ஒண்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம்,
- ஆய்வக உதவியாளர்கள் சங்கம்,
- இலங்கை”ஜனஜய”சுகாதார ஊழியர்கள் சங்கம்,
- தேசிய சமகி சுகாதார சேவைகள் சங்கம்,
- அலுவலக உதவியாளர்கள் சங்கம்
என 11 சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை கோஷமிட்டும், பதாகைகளை ஏந்தியும் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.