வரி பாக்கியை செலுத்த தவறியதன் காரணமாக வருடாந்த உரிமம் புதுப்பிக்கப்படாத ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினெர்ஜி டிஸ்டில்லரீஸ் (பிரைவேட்) லிமிடெட், ஃபின்லாந்து டிஸ்டில்லரீஸ் கார்ப்பரேஷன் (பிரைவேட்) லிமிடெட், வயம்ப டிஸ்டில்லரீஸ், டபிள்யூ எம் மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட் மற்றும் ரண்டேனிகல டிஸ்டில்லரீஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட கால நிலுவைத் தொகையை வைத்திருந்த இந்த நிறுவனங்களுக்கான வருடாந்திர உரிமங்கள் அக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டதாகவும், புதுப்பிக்கப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி பாக்கியை செலுத்தத் தவறியதன் காரணமாகவே உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மதுவரி திணைக்களம், அவர்களின் மதுபான உற்பத்தி மற்றும் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளது.