உலகமெங்கிலும் வாழுகின்ற தழிழ் மக்கள் இன்று தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில்,
உலகமெங்கிலும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடத்தை வகிக்கிறது.
எமது உள்ளத்திலுள்ள தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உqதயமாக்கும் இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு பகவானினால் நரகாசுரன் தோற்கடிக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதோடு தனக்கு ஞான ஒளி கிட்டியது போல உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளிகிட்ட வேண்டுமென நரகாசுரன் விஷ்ணு பகவானிடத்தில் வேண்டியதாக கூறப்படுகிறது.
அதனை நினைவுகூறும் வகையில், அனைவரது மனங்களிலும் ஒளி பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனேயே இந்து பக்தர்கள் விளக்கேற்றி சமய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
நாடு என்ற வகையில் நாம் கடந்த இரு வருடங்களில் எதிர்கொண்டிருந்த இருளான யுகத்திலிருந்து மீண்டு, ஒளி நிறைந்த பாதையில் இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள இந்தத் தருணத்தில் நாட்டிற்காகவும் சுபீட்சமாக நாடு மேம்பட வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்து பக்தர்களுக்கும் இருளை அகற்றி ஒளி பிறக்க தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தீவாளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில்,
முழு உலகிலும் தீமைகள் எனும் அந்தகாரத்தை அகற்றி நன்மைகள் எனும் ஒளியைப் பரவச்செய்யும் உயர்ந்த நோக்குடன் உலகெங்கிலுமுள்ள இந்துக்கள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் தீபங்களை ஏற்றி தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
அனைவருக்கும் அமைதி மற்றும் சுபீட்சத்திற்கான பிரார்த்தனையுடன் பொது ஆன்மீக வெற்றிகளுக்காக இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உறுதிபூணுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில்,
இந்து பக்தர்களின் இதயங்களில் ஒளிமயமானதும் மகிழ்ச்சியும் நிரம்பிய தீபாவளியைக் கொண்டாடும் இலங்கை இந்து சமூகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தீபாவளி திருநாளின் தீபங்கள் நம் இல்லத்தில் உள்ள இருளை நீக்கி, வெளிச்சம் கொடுப்பது போல், நம் இதயங்கள் அன்பு, கருணை, ஒற்றுமை ஆகிய உணர்வுகளால், உண்மையாகப் பிரகாசித்தால், தீபாவளிக் கொண்டாட்டம் மனிதாபிமானமாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இன்று தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் உலகமெங்கிலும் வாழுகின்ற அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் எப்.எம்., தனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.