கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பூசாரி ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (18) தீர்ப்பளித்துள்ளார்.
இந்த சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்படட சிறுமிக்கு இழப்பீடாக இரண்டு இலட்சம் ரூபாவும் 10 ஆயிரம் ரூபா அபராதத்தையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சிறுமிக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை செலுத்த தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகளும், அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளியான பூசாரி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார், சந்தேக நபரை கைது செய்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.
குறித்த வழக்கு, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சிறுமியின் சாட்சியம் மற்றும் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி, குற்றத்தை செய்துள்ளார் என்பது தெளிவாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது.