ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், தன் அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் ஜூக் பாக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில், ‘திமிறி எழுடா’ என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடியுள்ளனர். ஏ.ஜ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் குரலை ‘லால் சலாம்’ பாடலுக்கு பயன்படுத்தி புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
இந்த ஜூக் பாக்ஸை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது குரலை அவர்களின் குடும்பங்களின் அனுமதியோடு தான் பயன்படுத்தினோம்.
இதற்கான தொகையும் கொடுத்துள்ளோம். தொழில்நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் அது தொல்லை இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.