மியாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோகன் போபண்ணா, அவுஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார்.
தொடர்ந்து முன்னேறிய இந்த ஜோடி, இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், செம் வெர்பீக்(நெதர்லாந்து) – ஜான் பேட்ரிக் ஸ்மித் (அவுஸ்திரேலியா) ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் தொடக்கத்தில் போபண்ணா-எப்டன் ஜோடி, அடுத்தடுத்து தவறுகள் செய்ததால் முதல் செட்டை இழந்தது. அதன்பின், சிறப்பாக ஆடிய இவர்கள், 3 – 6, 7 – 6 (4), 10 – 7 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் மார்செல்-ஹோராசியோ மற்றும் லாயிட் கிளாஸ்பூல்-ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெறும் ஜோடியுடன், போபண்ணா-எப்டன் ஜோடி பலப்பரீட்சை நடத்த உள்ளது.
உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள போபண்ணாவுக்கு இன்றைய போட்டியில் கிடைத்த வெற்றியானது, ஏ.டி.பி. இரட்டையர் தரவரிசையில் டாப்-10இல் தொடர்ந்து நீடிக்கவும், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறவும் உதவும்.