NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. 

இதில் நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணியின் தலைவர் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

இதில் ஜெய்ஸ்வால் 24 ஓட்டங்களிலும், முந்தைய போட்டியின்‌ ஹீரோ பட்லர் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் – ரியான் பராக் இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதிரடியாகவும் அதே நேரத்தில் கவனமாகவும் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

நடப்பு IPL தொடரில் 3-வது அரை சதத்தை பூர்த்தி செய்த ரியான் பராக் 76 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹெட்மேயர், தனது பங்குக்கு 13 ஓட்டங்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ஓட்டங்களை குவித்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 68 ஓட்டங்களும் அடித்தனர். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், ரஷித் கான், மொகித் சர்மா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 197 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கில் , சாய் சுதர்சன் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 64 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த மேத்யூ வேட் 4 ஓட்டங்கள், அபினவ் மனோகர் 1 ஓட்டம் , விஜய் ஷங்கர் 16 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் கில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 44 பந்துகளில் 72 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ராகுல் திவேட்டியா , ரஷீத் கான் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ராஜஸ்தான் அணியின் அவேஷ் கான் வீசினார்.

இதில் அதிரடியை காட்டிய ரஷீத் கான் 3 பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அவர் 11 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார் குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles