சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது என இந்திய அணியின் தலைவர் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஹிட்மேன் என செல்லமாக அழைக்கப்படும் ஷர்மா இந்திய அணியின் தலைவராக செயற்படுவதுடன், ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் விளையாடி வருகின்றார்.
சமீப காலமாக அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்து வதந்திகள் வெளியாகின.
எனினும் அவர் வெளிப்படையாக எதையும் பேசியிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, தனது ஓய்வு குறித்து முதல் முறையாக ஷர்மா பேசியுள்ளார்.
இந்தியாவுக்கு டி20 உலகக் கிண்ணத்தை வென்றுகொடுப்பது மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.
“நான் உண்மையில் ஓய்வு பெறுவதைப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால், வாழ்க்கை எங்கு அழைத்துச் செல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் நான் இன்னும் நன்றாக விளையாடுகிறேன்.
அதனால் நான் இன்னும் சில வருடங்கள் தொடர்தும் விளையாடப் போகிறேன், நான் உண்மையில் உலகக் கிண்ணத்தை வென்றுகொடுக்க விரும்புகிறேன்.
அடுத்த ஆண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அதிலும் இந்தியாவை வெற்றியடையச் செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.