இரவு நேரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ரகளை செய்ததற்காக காவல்துறையிடம் சிக்குகிறார் ச.பா. அரவிந்த் என்கிற சபா (அசோக் செல்வன்). காவல்துறைவாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களிடம் தன் காதல் கதைகளைச் சொல்கிறார்.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த சபா, ஈரோட்டில் 11-ம் வகுப்பில்சேர்கிறார். அதே பள்ளியில் படிக்கும் ஈஷா (கார்த்திகா முரளிதரன்) மீது அவருக்கு காதல் . ஆனால் அவளிடம் பேசுவதற்கு முன்பே பள்ளிக் காலம் முடிந்துவிடுகிறது.
பிறகு பொறியியல் கல்லூரியில் ரியா(சந்தினி சவுத்ரி), எம்பிஏ படிக்கும்போது சக மாணவி (மேகா ஆகாஷ்) ஆகியோரைக் காதலிக்கிறார். இடையில் பள்ளிப் பருவக் காதலி ஈஷா, மீண்டும் சபாவின் வாழ்வுக்குள் வந்துபோகிறாள். வாழ்வின் வெவ்வேறு பருவங்களில் 3 பெண்களைக் காதலிக்கும் சபா இறுதியில் யாருடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார் என்பதே மீதிக் கதை.
நாயகனுக்கு வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் காதல்களை வைத்து ‘ஆட்டோகிராப்’ தொடங்கி சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘ஜோ’ வரை பல படங்கள் வந்துவிட்டன.
ஆனால் திரைக்கதையை சுவாரஸியமாகவும் கலகலப்பாகவும் அமைத்துவிட்டால் பார்த்த கதை என்றாலும் சலிப்பைத் தராது என்பதற்கான உதாரணம் அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயனின் ‘சபா நாயகன்’. படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை சிரிக்க வைப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் கார்த்திகேயன் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
பள்ளிப் பருவக் காட்சிகளில் நாயகனின் நண்பர்கள் சிலருக்கு காதல் கைகூடிவிடுவதும் நாயகனுக்கு மட்டும் கைகூடாமல் இருப்பதும் இதனால் ஏற்படும் கிண்டல் கேலிகளும் ரசிக்க வைக்கின்றன.
அதேபோல் கல்லூரிப் பருவத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக 200 ரன்கள் அடித்த சாதனை, நாயகனின் வாழ்வில் முக்கிய திருப்பத்துக்குக் காரணமாக அமைவது, இரண்டாம் பாதியில் நாயகனின் நண்பர் ஒருவரை இதய மருத்துவர் என்று பொய் சொல்வதால் ஏற்படும் ரகளைகள் என அங்காங்கே சுவாரஸியமான ஐடியாக்களைத் தூவியிருப்பதால் திரைக்கதை தொய்வின்றி நகர்கிறது.
இடையிடையே நிகழ்காலத்துக்கு வரும் திரைக்கதையில் நாயகனின் கதையைக் கேட்கும் காவலர்கள் கொடுக்கும் ரியாக்ஷன்கள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.
லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன. பால சுப்ரமணியெம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என மூவர் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் படம் முழுக்க கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
கதையில் புதுமை இல்லை என்றாலும் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கிறான் இந்த ‘சபா நாயகன்’.