NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அங்கொடை வைத்தியசாலையில் தாக்குதலுக்கு இலக்கான மனநோயாளர் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு – அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வட்டரெக பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 47 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீண்டகாலமாக மன நோய்க்கு ஆளான குறித்த நோயாளி, தீவிரமடைந்த மனநோய் நிலைமை காரணமாக கடந்த 20ஆம் திகதி அங்கொடை மனநல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும், கடந்த 25ஆம் திகதி அதிகாலை வேளையில் குளியலறையில், வழுக்கி விழுந்த சந்தர்ப்பத்தில், தலையில் அடிப்பட்டதால் அவர் மரணித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நோயாளியின் சடலம் முத்திரையிடப்பட்ட நிலையில், உறவினர்களிடம் வழங்கப்பட்டதன் காரணமாக உறவினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன்படி அந்த வைத்தியசாலையின் விசேட சட்டவைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆயுதங்களால் தாக்கப்பட்டமையால் ஏற்பட்ட பல தாக்க நிலைமைகள் காரணமாக குறித்த நபர் மரணித்தார் என்று பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கமைய வைத்தியசாலை பணியாளர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என்று குறித்த நோயாளியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles