NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த போட்டியைத் தொடங்கிய எலான் மஸ்க்: ChatGpt’க்கு போட்டியாக xAI ஆரம்பம் !

‘ஓபன் ஏஐ’ எனும் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, உலகெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

கூகுள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ‘டீப்மைண்ட்’ஐ உருவாக்கியுள்ளது. இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

‘ஏஐ’ குறித்து பலமுறை எச்சரித்துள்ள மஸ்க், அதனை “மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டிருந்தார். அதை உருவாக்குவதில் அவசரம் காட்டுவது “பேயை வரவழைப்பது போன்றது” என்றும் கூறியிருந்தார்.

தற்போது ‘எக்ஸ்ஏஐ’ நிறுவனத்தை குறித்து மஸ்க், “சாட்ஜிபிடி அரசியல் ரீதியாக சார்புநிலை கொண்ட பொறுப்பற்றது. ஆனால் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் குறிக்கோள் பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையை புரிந்துகொள்வதுடன் வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்கு பதிலளிப்பதுமாகும்” என கூறியிருக்கிறார்.

இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருவதோடு, ஏஐ (AI) என்பது தொற்றுநோய் மற்றும் அணுஆயுத போருக்கு இணையான ஆபத்து என்று எச்சரித்தவரும், பிரான்சிஸ்கோவை மையமாக வைத்து செயல்பட்டு வரும் ‘ஏஐ’ பாதுகாப்பு மையத்தை வழிநடத்துபவருமான டான் ஹென்ட்ரிக்ஸ் எக்ஸ்ஏஐ குழுவிற்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles