X (முன்பு டுவிட்டர்) தளத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்களை தளத்தில் மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், X தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டுவிட்டர் தளத்தில் மெசேஜிங் தவிர்த்து, ஹோம் ஃபீட் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது. இதன் காரணமாக டுவிட்டர் தளத்தில் மிகவும் அரிதான நடவடிக்கையாக மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்போது, X தளத்தில் புதிதாக வீடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்பட இருக்கிறது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் X தலைமை செயல் அதிகாரியான லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார்.
“நீண்ட வீடியோ மற்றும் செய்தி கட்டுரைகள் பிரபலமாக மாறி வரும் நிலையில், உங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களுக்கு சந்தாதாரர் ஆகிடுங்கள், அவர்கள் தற்போது இதில் இருந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வீடியோவை பாருங்கள், விரைவில் உங்களது மொபைல் நம்பரை கொடுக்காமல், வீடியோ கால் மேற்கொள்ள முடியும்,” என யாக்கரினோ தெரிவித்தார்.
இதே தகவலை X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே டுவிட் மூலம் உறுதிப்படுத்தியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.