NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடைக்கலம் கொடுத்த இரத்தினக்கல் வியாபாரியின் வீட்டில் திருடிய குடும்பத்தினர்..

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இரத்தினபுரியில் ஆதரவற்ற குடும்பத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று மூன்று வேளை உணவு வழங்கிய இரத்தினக்கல் வியாபாரி ஒருவரிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இரத்தினக்கல்லை திருடிய குடும்பத்தின் தாய், தந்தை மற்றும் மகன் இரத்தினபுரி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இரத்தினபுரி முதுவ பிரதேசத்தில் வசிக்கும் குடும்பமொன்றின் மனைவி, கணவன் மற்றும் பிள்ளைகளை, மாணிக்க வியாபாரி ஒருவர், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்குமிடம் கொடுத்து மூவருக்கும் உணவளித்ததாக கூறப்படுகிறது.

வெள்ளம் வடிந்த பின்னர், மாணிக்க வியாபாரியின் வீட்டை விட்டு வெளியேறிய இந்த குடும்பம், மறுநாள் திரும்பி வந்து வீட்டின் முற்றத்தை சுத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

வாக்குறுதியளித்தபடி, தம்பதியும் 12 வயது சிறுவனும் சில நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினர். அப்போது தொழிலதிபர் வீட்டில் இல்லை. தொழிலதிபரின் மனைவி மட்டும் வீட்டில் இருந்ததாக பொலிஸார்தெரிவித்தனர்.

குடும்பத்தின் தந்தை முற்றத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, ​​அவரது மனைவியும் மகனும் வீட்டிற்குள் நுழைந்து சுவாமியறையில் வைக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற மாணிக்கக்கற்கள் பலவற்றையும் மூன்று தடவைகளில் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டின் பாதுகாப்பு கேமராக்களிலும் அவர்கள் மாணிக்கக்கற்களை திருடுவது பதிவாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால், குறித்த வர்த்தகர் இரத்தினபுரி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து, தம்பதியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles