அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்குமான பொதுவான எரிபொருள் விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்தார்
அதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் விலை சூத்திரத்தின் கீழ் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் உட்பட அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்குமான அதிகபட்ச சில்லறை விலை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், அந்த நிறுவனத்தின் முதல் 2 எரிபொருள் கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அதன்படி, எரிபொருள் தாங்கிய 2 கப்பல்களும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.