NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – விவேக் ராமசாமிக்கு பெருகிவரும் ஆதரவுகள்!

2024இல் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக அந்நாட்டின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தயாராகி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கிராண்ட் ஓல்ட் பார்ட்டி என அழைக்கப்படும் குடியரசு கட்சியின் வேட்பாளராக யாரை அறிவிப்பது என அக்கட்சியில் தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. டிரம்ப் ஆதரவாளர்களான புளோரிடா ஆளுநர் ரான் டிசான்டிஸ், தொழிலதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசுவாமி, முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வட டகோடா மாநில கவர்னர் டக்ளஸ் பர்கம், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டீ ஆகியோருடன் டிரம்பை எதிர்க்கும் அர்கன்ஸாஸ் மாநில முன்னாள் ஆளுநர் அஸா ஹட்சின்ஸன் உட்பட பல வேட்பாளர்கள் குடியரசு கட்சியிலேயே களத்தில் உள்ளனர்.

குடியரசு கட்சியின் வேட்பாளர்களை மட்டும் உள்ளடக்கிய ஒரு விவாத நிகழ்ச்சி, ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியால் அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் உள்ள மில்வாக்கி பகுதியில் நடத்தப்பட்டது.

இதில் அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் நிற்க விரும்பும் 8 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.

இதனை ஒரு பிரசார மேடையாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் நிலைப்பாடுகளை குறித்த கருத்து தெரிவித்தவர்களில் விவேக் ராமசாமியின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும் பேசுபொருளானது.

இந்த விவாத நிகழ்ச்சிக்கு பின்னர் அங்குள்ள பல ஊடகங்கள் அவரை பாராட்டி வரும் நிலையில், கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் விவேக் ராமசாமி இருந்தார். விவேக்கிற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை குறிக்கும் விதமாக கட்சிக்கான நிதியளிப்பில் ஏராளமானோர் முன்வந்து நன்கொடையளித்து வருகின்றனர்.

நிகழ்ச்சி முடிந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே விவேக் ராமசாமியின் பிரசாரத்திற்கு ஆதரவாக 450,000 அமெரிக்க டொலர்கள் இதுவரை நன்கொடை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானது போல, அமெரிக்காவிலும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அதிபர் ஆனால், வெள்ளையர்களால் ஆளப்பட்ட நாட்டை சேர்ந்தவர்கள் வெள்ளையர்களின் நாட்டை ஆள்கிறார்கள் எனும் சிறப்பு இந்தியாவிற்கு கிடைக்கும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles