NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமைச்சர்கள் – கட்சி உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் இவ்வாறு வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையிலே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலே இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 45 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

அத்துடன், தற்போது எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோரும் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமைக்காக, சுகாதார அமைச்சர் என்ற வகையில் கெஹெலிய ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டியவர் என குறிப்பிடப்பட்டு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 28 ஆவது பிரிவின்படி அமைச்சர் தமது அடிப்படைக் கடமைகளை புறக்கணித்துள்ளார் எனவும் குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவகாசம் தேவை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கோரிய நிலையில், அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது மருந்து ஒவ்வாமையினால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

மருந்து ஒவ்வாமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் தாம் இவ்வாறு அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles