அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து வெளியேற்றப்படும் வெள்ளநீர் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள தாழ் நில பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
கல்முனை பிரதான நகரையும் நாவிதன்வெளி பிரதேசத்தையும் இணைக்கும் கிட்டங்கி பாலத்தின் ஊடாக சுமார் 4 அடிகளுக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாவிதன்வெளி – சவளக்கடை பிரதேசத்திற்கும் சம்மாந்துறைக்கும் இடையிலான பிரதான வீதியின் ஊடாக வெள்ளநீர் பெருக்கெடுத்து பாய்வதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
நாவிதன்வெளி – வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களை இணைக்கும் பிரதான வீதியின் ஊடாகவும் வெள்ளநீர் பாய்ந்து செல்வதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தமது போக்குவரத்தை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த பகுதிகளில் அரச பணிகளுக்காக சென்று வரும் அரச உத்தியோகத்தர்கள் தமது பணிகளுக்கு செல்வதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர் கொண்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.