NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அயர்லாந்தை இலகுவாக வீழ்த்தியது இந்தியா!

டி20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின.

இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் டெலானி அதிரடியாக விளையாடி அயர்லாந்து சிறந்த நிலையை எட்ட உதவினார்.

வெறும் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து 96 ஓட்டங்களுக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக டெலானி 26 ஓட்டங்கள் அடித்தார்.

இதனைத்தொடர்ந்து 97 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் தலைவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் விராட் கோலி 1 ஓட்டத்துடன் பிடிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக ஓட்டங்களை சேர்த்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா, 36 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இதனிடையே டி 20 தொடரில் தனது 4 ஆயிரம் ஓட்டங்களையும் ரோகித் சர்மா கடந்தார். அதன்பிறகு காயம் காரணமாக ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து ரிஷப் பண்டுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் சூர்யகுமார் யாதவ் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்த ரிஷப் பண்ட் 36 (26) ஓட்டங்களும், ஷிவம் துபே (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

முடிவில் இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் சார்பில் மார்க் ஆதிர் மற்றும் பெஞ்சமின் வொயிட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, உலகக் கிண்ணத் தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles