NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு!

மருந்துத் தட்டுப்பாட்டின் காரணமாக, இலங்கை முழுவதிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அவர்கள் தனியார் மருந்தகங்களில் அதிகளவு விலைகளில் மாற்று மருந்துகளை நாட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இந்த பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.

இவ்வாறு தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையிலுள்ள நோயாளிகளுக்கு இது கூடுதல் செலவாகவும் சுமையாகவும் உள்ளது.

மருந்துகள் பற்றிய தகவல் மேலாண்மை அமைப்பான ‘ஸ்வஸ்தா -(Swastha) வின் அறிக்கையின்படி, டபுள் ஜே ஸ்டென்ட் 6 எப்.ஆர், 26 சென்டிமீற்றர் நீளம் (Double J Stent 6Fr 26cm length), குழந்தைகள், வயது வந்தோருக்கான சிறுநீரகப் பையில் செய்யப்படும் சிகிச்சை முறைகளுக்கு பயன்படுத்தும் மருந்துகள் (Ureteric stents), மற்றும் எமோக்ஸ்லின் (Amoxicillin) போன்ற மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) டொக்டர்.ஜி.விஜேசூரிய, மருந்துத் தட்டுப்பாட்டை ஒப்புக்கொண்டதுடன் இப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாற்று மருந்துகளைப் பயன்படுத்த முடியும் எனவும் வலியுறுத்தினார்.

இதேவேளை குறிப்பிட்ட சில மருந்துகளில் 20-30 சதவீதம் பற்றாக்குறை காணப்படுவதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகைக்கு விளக்கமளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியின் தவறான நிர்வாகமே தற்போதைய பற்றாக்குறைக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த மருந்துகள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யவும் மருத்துவ தேவைக்காக அரசாங்க மருத்துவமனைகளை நம்பியுள்ள நோயாளிகளின் அவலத்தை போக்கவும் குறித்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles