NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசியல் தீர்வுகளைத் தேடும் மக்கள் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து சிந்திப்பதில்லை – மன்னாரில் ஜனாதிபதி குற்றச்சாட்டு

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சுபீட்சமான எதிர்காலத்திற்கான பயணம் என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது இளைஞர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்களின் கேள்விகளுக்கும் சாதகமான பதில்களை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியினால் 4 வருடங்களாக தொழில்களை வழங்க முடியாமற்போனதோடு, தொழில் கிடைத்த பலரும் அவற்றை இழந்து நிற்கும் நிலைமையும் ஏற்பட்டதாகவும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால், புதிய பாதையில் சென்று தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமா, இல்லாவிட்டால் பழைய முறையில் சென்று வீழ்ச்சியடைவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனையடுத்து மன்னார் மாவட்ட வர்த்தர்களுடனான சந்திப்பில், அரசாங்கம் முன்மொழிந்துள்ள வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிப் பயணிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் பெருமளவான முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகைத் தருவார்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, காலத்துக்குக் காலம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல், சரியான பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ச்சியாகப் பின்பற்றினால் நாடு முன்னேற்றமடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்காகவே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தைச் சமர்பித்திருப்பதாகவும் அதனை எந்தவொரு அரசாங்கமும் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு, நீண்டகாலமாக அரசியல் ரீதியான தீர்வைத் தேடும் இந்நாட்டு மக்கள் ஒருபோதும் பொருளாதாரத்தின் பக்கமாக தீர்வைத் தேடவில்லை எனவும் சரியான பொருளாதாரக் கொள்கையின் ஊடாக மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சரிவடைந்திருந்த பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் கட்டியெழுப்ப தன்னால் முடிந்ததாகவும் பொருளாதாரம் வலுவடையும்போது அதன் பலன்கள் சகல தரப்பினருக்கும் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

-தர்மராஜ் யோகராஜ்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles