NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு…!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் நடத்திய கலந்துரையாடல்களில் வறிய மக்களை, அந்த நிலைமையில் இருந்து மீட்பதற்கு குறைந்தது 187 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அரசாங்கம் அதனை 206 பில்லியன் ரூபா வரை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மையுடன் மிகவும் பொருத்தமான குழுவிற்கு இதன் கீழ் நன்மைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இந்த மாதத்திலேயே நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தற்போது சமுர்த்திக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்ப அலகுகளில் 12 இலட்சத்து 80 ஆயிரத்து 747 குடும்பங்கள் அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் சுமார் 8 இலட்சத்து 87 ஆயிரத்து 653 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளவைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தகுதியுள்ளவர்களாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஓகஸ்ட் மாதக் கொடுப்பனவுடன் சேர்த்து ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவையும் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

Share:

Related Articles