(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
20ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை மெய்வல்லுநர்கள் சம்மேளனம் எடுத்துள்ளது.
ஆசிய மெய்வல்லுநர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இப்போட்டியானது, எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தென் கொரியாவில் நடைபெறவுள்ளது.
அதற்கமைய 45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1500 வீர, வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை குழுவில் 4 வீரர்கள், 4 வீராங்கனைகள் மற்றும் 3 அதிகாரிகள் என 11 பேர் தென் கொரியா நோக்கி பயணமாகவுள்ளதுடன், விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்கு இது பற்றிய விபரம் அடங்கிய ஆவணம் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 1986 முதல் 2018 வரை இலங்கை 30 பதக்கங்களை வென்றுள்ளமை சுட்டிக்காட்டக்கத்தக்கது.