(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கேகாலை புறநகர் பகுதியில் அமைந்துள்ள கலப்பு பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் 13 வயதுடைய மாணவனின் காதை கடுமையாகத் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாதிப்புக்குள்ளான மாணவன் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன், கேகாலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை பொது வைத்தியசாலையின் காது, தொண்டை மற்றும் மூக்கு பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மாணவனை பரிசோதித்த வைத்தியர்கள், செவிப்பறை சேதமடைந்துள்ளதால் சத்திரசிகிச்சை செய்ய தீர்மானித்துள்ளனர். அதன்படி நேற்று (07) காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மாணவனின்; பெற்றோர்கள் கேகாலை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.