NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை – ஜனாதிபதி 

மூன்று வருடங்களின் பின்னர் 2024 ஆம் ஆண்டில் 4000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதன் போத நியமனம் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதி அடையாள ரீதியில் சிலருக்கு நியமனங்களை வழங்கி வைத்தார்.

ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றுகையில், எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கௌரவமான தொழிலான ஆசிரியத் தொழிலின் மரியாதையை அழிக்கும் வகையில் ஒருபோதும் செயற்படக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்கள் எப்பொழுதும் பாட அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

நீங்கள் ஒரு வகுப்பறையை மாத்திரம் பொறுப்பேற்கவில்லை. அந்த வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை தான் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். 05 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் உங்களுடன் தான் தமது நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால்தான் அவர்கள் வீட்டில் இருந்து பெறும் வழிகாட்டுதலைப் போன்றே பாடசாலையிலிருந்து அவர்கள் பெறும் வழிகாட்டுதலும் மிகவும் முக்கியமானது. அந்தப் பொறுப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கு பாட அறிவை மட்டும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த மாணவர்களின் வாழ்க்கையை நீங்கள்தான் வடிவமைக்க வேண்டும்.

இன்று, இணையத்தில் பாட அறிவை பெறலாம். ஆனால் மாணவர்களின் குணாதிசயத்தை கட்டியெழுப்ப இணையத்தால் முடியாது. நம் அனைவரின் வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதில் பெற்றோரிடமிருந்து பெற்ற வழிகாட்டுதலைப் போன்றே ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது. அதனால்தான் ஆசிரியர் தொழில் உயர் தொழிலாகக் கருதப்படுகிறது. அந்த மரியாதையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஆசிரியர்களாகிய உங்களது அறிவு மிகவும் முக்கியமானது. இன்று நாளுக்கு நாள் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சமூகம் உள்ளது. எனவே, கடந்த காலங்களில் பாட அறிவை அதிகரிக்காமல் ஆசிரியர்கள் பணியாற்றுவது சாத்தியமாக இருந்த போதிலும், இன்று அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது. உங்கள் அறிவு இன்னும் 10, 20 ஆண்டுகளில் போதுமானதாக இருக்குமா என்று சிந்தியுங்கள். எனவே, ஆசிரியர்கள் பாட அறிவை மேம்படுத்த எப்போதும் பாடுபட வேண்டும்.

இன்று 2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த நியமனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறைப்பெறுமானத்தை எட்டியது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாயின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது. எனவே, இன்று இந்த நியமனங்களை வழங்குவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

கடந்த ஆண்டு டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 370 ஆக இருந்தது. இன்று டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 300 ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை 280 ரூபாவாகக் குறைக்க எதிர்பார்க்கிறோம். அப்போது அரசாங்க செயற்பாடுகளுக்கான  பணத்தைத் தேட வேண்டியுள்ளது. இன்று நாம் கடினமான பாதையில் சென்றாலும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியும். இதன் போது அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடிந்தது. அத்துடன், சிங்களத் தமிழ்ப் புத்தாண்டுக் காலத்தில் நெல்லுக்கு சிறந்த விலையை வழங்க முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்ததாவது:

ஆறு மாதங்களுக்கு முன்னரே இந்த நியமனங்களை வழங்கியிருக்க வேண்டும். ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், கடந்த வருட இறுதியில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்தேன். அதன் பிரகாரம் உடனடியாக ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக மேல் மாகாண சபையினால் பரீட்சை நடத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக ஏனைய மாகாணங்களில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக நேர்முகத் தேர்வு நடத்திய போது சிலர் நீதிமன்றத்திற்குச் சென்றனர். நீதிமன்ற நடவடிக்கைகளால், ஆசிரிய நியமனம் வழங்குவது தாமதமானது.

பாடத்துடன் இணைந்ததாகவே ஆசிரியர்களை நியமிப்பதற்காக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்றும் இந்த நடைமுறையின் கீழ் ஆசிரியர்  நியமனம் வழங்குகையில் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்து வருகின்றனர். எனவே 2019ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க  முடியவில்லை. ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இப்படி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மேலதிகமாக எதிர்காலத்தில் மேலும் பல நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் ரொஷான் குணதிலக்க குறிப்பிட்டதாவது:

மேல் மாகாணத்திற்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும். ஆசிரியர் பற்றாக்குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது.இந்த நியமனங்களை முறையாக வழங்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்கள் காரணமாக ஆசிரியர் நியமனம் தாமதமானது. பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் படிப்படியாக அதிகரித்தன. ஆசிரியர் பற்றாக்குறையை நாட்டிற்கோ கல்வித்துறைக்கோ தாங்க முடியாது. ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அங்கீகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் நன்றி.

இன்று இந்த ஆசிரியர் நியமனம் பெறும் நீங்கள் வெறும் தொழிலை மட்டும் செய்யவில்லை. நீங்களும் நாட்டுக்கு சேவை செய்யக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.மாணவர்களுக்கு இரண்டாவது வழிகாட்டி ஆசிரியர்கள். ஆசிரியர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் நளின் பெர்னாண்டோ,இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, சிசிர ஜயகொடி, அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்கள்,பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, மேல் மாகாண பிரதம செயலாளர் தம்மிக்க விஜயசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share:

Related Articles