உள்நாட்டு அல்லது வெளிநாட்டுப் பொதிகள் பெறப்பட்டமை தொடர்பில் இலங்கை தபால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என தபால் மா அதிபர் எஸ். ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் போலி கையடக்க தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL POST, Sri Lanka Post போன்ற பெயர்களைப் பயன்படுத்தியும் இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பயன்படுத்தியும் இந்த மோசடி சம்பவம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை தபால் திணைக்களம் ஒருபோதும் குறுஞ்செய்திகள் மூலம் அட்டைத் தகவல்களைப் பற்றி விசாரிக்காது எனவும், கடன் அட்டைகள் மூலம் பொதிகள் தொடர்பான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு, இணையத்தளத்திற்கோ அல்லது குறுஞ்செய்தி ஊடாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தமது கடன் அட்டை விபரங்களை வழங்க வேண்டாம் எனவும் தபால் திணைக்களம் மக்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொண்டுள்ளது