ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்றிரவு முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸை எதிர்கொள்கிறது.
இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி 2 வெற்றி (லக்னோ, மும்பைக்கு எதிராக), 2 தோல்வி (குஜராத், ராஜஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.
அணியில் இப்போது காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், சிசாண்டா மகாலா இரு வாரங்கள் விளையாட வாய்ப்பில்லை என்பதுடன், கால்பாதத்தில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை அணித்தலைவர் டோனியும் கால் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது. துடுப்பாட்டத்தில் டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, கேப்டன் டோனி, பந்து வீச்சில் ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே நல்ல நிலையில் உள்ளனர்.
சென்னை போன்றே பெங்களுரு அணியும் 2 வெற்றி (மும்பை, டெல்லிக்கு எதிராக) 2 தோல்விகளுடன் (கொல்கத்தா, லக்னோவுக்கு எதிராக) 4 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களுரு அணித்தலைவர் பிளிஸ்சிஸ் (2 அரைசதம் உள்பட 197 ரன்கள்), முன்னாள் அணித்தலைவர்; விராட் கோலி (3 அரைசதத்துடன் 214 ரன்கள்), மேக்ஸ்வெல் (ஒரு அரைசதத்துடன் 100 ரன்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்திற்பு வலுசேர்த்து உள்ளனர்.