இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வினை நடத்தியுள்ளது.
நேர்முகத்தேர்வுக்கு முகங்கொடுத்தவர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்குப் பிறகு தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என ராகுல் டிராவிட் உறுதியாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நாட்டிற்குச் சேவையாற்றுவதில் தமது விருப்பத்தை வெளிப்படுத்திய கௌதம் கம்பீர், தமக்கு இதனைவிட பெரிய கௌரவம் எதுவும் இல்லை என அண்மையில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கான நேர்முகத்தேர்வு இன்றைய தினமும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர்காலத்தில் இரண்டு தனித்தனி கிரிக்கெட் அணிகளை உருவாக்க கௌதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி இருபதுக்கு 20 கிரிக்கெட் அணி தனியாகவும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி தனியாகவும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருதுகிறார்.
இருபதுக்கு 20 அணியில் இளம் வீரர்களை இணைத்து, விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்றவர்களை நீக்கவும், அவர்களை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவதானம் செலுத்தவிடுவதும் கௌதம் கம்பீரின் திட்டமாகும்.