NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மொஸரெல்லா பாலாடைக்கட்டி மற்றும் ஒலிவ் பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இத்தாலியின் விவசாய அமைச்சர் பிரான்செஸ்கோ லொலோபிரிஜிடாவிடம் (Francesco Lollobrigida)  கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19ஆவது அமர்வில் இத்தாலியின் ரோம் நகரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பங்கேற்கவுள்ளார்.

நேற்று (24) பிற்பகல் இத்தாலியின் விவசாய அமைச்சர் பிரான்செஸ்கோ லொலோபிரிகிடாவை விவசாய அமைச்சர் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயம் உறுதியானது.

அத்துடன், இந்த கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அந்தவகையில், இத்தாலியின் தெற்குப் பகுதியில் எருமைப் பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உலகளவில் பிரபலமான பாலாடைக்கட்டியான மொஸரெல்லா பாலாடைக்கட்டியை, நமது நாட்டிலும் உற்பத்தி செய்வதற்கும், ஆரோக்கியமான எண்ணெய் பயிரான ஒலிவ் எண்ணெயை உற்பத்தி செய்வதற்கும் இலங்கையில் ஒலிவ் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயங்கள் தொடர்பிலான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

மொஸரெல்லா பாலாடைக்கட்டி உற்பத்திக்காக இத்தாலிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்தால் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் ஒலிவ் பயிர்ச்செய்கை ஏற்ற காலநிலை உள்ள பகுதிகள் இருப்பதால் அதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வது பொருத்தமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தவிர, காலநிலைக்கு ஏற்ற விவசாய முறைகள் பற்றிய நிபுணர் பரிமாற்றம், அதிக விளைச்சல்; தரும் திராட்சை விதை பரிமாற்ற திட்டத்தை தயாரித்தல் மற்றும் அதற்கான தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல், அத்துடன் இலங்கையில் நமது நாட்டின் மண் அமைப்புக்கு ஏற்ற திராட்சை வகையை அறிமுகப்படுத்துதல், இலங்கையில் கால்நடை வளர்ப்பு முறைகளை மேம்படுத்துதல், இலங்கையில் இருந்து கால்நடை பரிமாற்ற திட்டம் தயாரித்தல், உணவு உற்பத்தித் துறையில் நிலையான அபிவிருத்தி மற்றும் இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான விவசாயப் பணியாளர்களின் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles