இலங்கை சிறுவர்களை மலேசியா ஊடாக ஐரோப்பியா போன்ற நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே குறித்த நபரை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையைச் சேர்ந்த 17 சிறுவர்களை நாட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளான நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டுப் பிரிவிற்கு விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டுப் பிரிவினர் அவரைக் கண்காணித்து உன்னிப்பாகக் கண்காணித்து வந்ததுடன், மலேசிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அவர் குறித்து அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தப் பின்னணியில், ஏப்ரல் 25ஆம் திகதி, 14 வயது சிறுவன் ஒருவனை அவனது தந்தையுடன் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லும்போது, அவர்களைக் கைது செய்த கோலாலம்பூர் விமான நிலைய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். .
அவர் 2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 17 இலங்கை குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் தமிழர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 13 சிறுவர்கள் தொடர்பிலான தகவல்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 8 சிறுவர்கள் யாழ் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், மீதமுள்ள 5 பேர் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் பெற்றோரிடமிருந்து எடுக்கப்பட்டு, அவர்களுடன் முதலில் மலேசியாவிற்கு புறப்பட்டுச் செல்கிறார்கள்.
அதன் பிறகு, மலேசியக் குழந்தைகளாகத் தேவையான ஆவணங்களைத் தயாரித்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு கடத்துகிறார்கள். கைது செய்யப்பட்டவர் இலங்கையில் இருந்து குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று தேவையான வசதிகளை செய்து கொடுப்பவர் என்பதுடன், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இந்த மாபெரும் மனித கடத்தல் நடவடிக்கையில் சக்தி வாய்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.