சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்பின்மை, புகையிலை, மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்புக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணிப்பாளர் அலுவலகத்தின் விசேட வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் இது தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்தார்.
இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளங்கள் சேதமடைவதால் இந்த நோய் நிலை ஏற்படுகிறது. இதை மாரடைப்பு அல்லது ஹாட் ஹெட்டக் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
தொற்றா நோய்களுக்கு பல சிறப்பு ஆபத்து காரணிகள் உள்ளன. முதலாவது ஆரோக்கியமற்ற அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் எண்ணெயின் பயன்பாடு, உடல் செயல்பாடு இல்லாமை, புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றின் பயன்பாடு ஆகும்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணனிகளின் அதிகரித்த பாவனையினால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையிலிருந்து விலகியுள்ளதாக வைத்தியர் ஷெரில் பாலசிங்கம் மேலும் தெரிவித்தார்.
குழந்தைகள் ஒரே இடத்தில் அதிக நேரம் செலவழித்து ஒன்லைன் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
வீட்டில் வயதான இல்லத்தரசிகள் கூட எப்போதும் டி.வி பார்த்து மணிக்கணக்கில் அமர்ந்துதான் இருப்பார்கள்.
மேலும் வயது வரம்பு இல்லாமல் மொபைல் போன்களுக்கு அடிமையாகி இருப்பது பெரும் சோகம். நாம் முடிந்த போதெல்லாம் நடக்க வேண்டும். என்றார்.