NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் இலத்திரனியல் பஸ் முன்னோடி வேலைத்திட்டம் ஆரம்பம்…!

வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பஸ்களை பாவனையில் ஈடுபடுத்தும் ஈ-பஸ் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக குறிப்பிட்டார்.

மேலும், பழமையான மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டத்தை முன்வைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்காக 13 குழுக்கள் நியமிக்கப்பட்டு, போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யத் தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய சட்ட வரைவு தயாரிக்கப்பட்டதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், வாகன இறக்குமதியின் போது இடம்பெறும் பல்வேறு மோசடிகளைத் தவிர்க்க ஈ மோட்டரிங் என்ற வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதேவேளை, விபத்துகளை தடுக்கும் வகையில் தகைமை இழப்பு புள்ளி செயல்முறையை நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே அபராதம் அறவிடப்படும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான அடிப்படைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles