(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் பிறந்த பிபிசியின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67ஆவது வயதில் காலமானார்.
பிபிசியின் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான அவர், இரண்டு தசாப்தங்களாக பிபிசி செய்தியை தயாரித்து வழங்கியதுடன், வெளிநாட்டு நிருபராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.
கடந்த 9 ஆண்டுகளாக அவர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (24) அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்திருந்தனர்.
புற்றுநோய் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக அவர் ஓய்வு எடுத்திருந்த நிலையிலும் கூட, செய்தி அறைக்கு திரும்புவதை இலக்காகக் கொண்டிருந்தார்.
கடந்த வருடம்ஒக்டோபரில், பிபிசி செய்தி அறையில் பணிபுரிவது ‘ஆற்றல் மற்றும் உந்துதலாக இருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று கூறி, கடைசியாக ஒலிபரப்புப் பணிகளில் இருந்து ஜோர்ஜ் அழகையா ஓய்வுபெற்றார்.
கொழும்பில் பிறந்நத ஜோர்ஜ் அழகையா கானாவிற்கு குடிபெயர்ந்த பின்னர் பிரித்தானியாவில் குடியேறினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் பிபிசியில் பணியாற்றியுள்ளார். சோமாலியா, ஈராக், ருவாண்டா உள்ளிட்ட நாடுகளில் அவர் பணியாற்றியுள்ளார். 1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளுக்காக ஜோர்ஜ் அழகையா விருதுகளை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.