NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை இனப்படுகொலை – ஆதாரமாகும் பராக் ஒபாமாவின் கருத்து

ஈழத்தமிழ் மக்களுக்கான சுயநிர்ணயமே, இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு ‘முக்கிய தீர்வு’ என்று அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதி விலி நிக்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸில் ஒரு வரலாற்று தீர்மானத்தை முன்வைத்த பின்னர் ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க நடவடிக்கையை முன்னெடுப்பதில் இந்தத் தீர்மானம் முக்கியமான முதல் படி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை, தமிழ் சமூகத்தின் துன்புறுத்தல் மற்றும் சுயநிர்ணயத்தின் அவசியத்தைப் பற்றிய தமது குரலை அமெரிக்காவில் ஒலிக்கச் செய்வதற்கான மிக முக்கியமான முதல் படியாகவும் இந்த தீர்மானம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இரண்டு பிரதான கட்சிகளைச் சேர்ந்த மற்ற ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களால் அனுசரணை செய்யப்பட்ட இந்தத் தீர்மானம், ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் சுதந்திரத்திற்கான கோரிக்கையை ஆதரிப்பதன் மூலம் தமிழ் இனப்படுகொலை உட்பட கடந்தகால வன்முறைகள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

இதற்காக தமிழர்கள் மத்தியில் சுதந்திரமான வாக்கெடுப்பையும் அது கோருகிறது. இந்த விடயம் தொடர்பாக தாம், கனடாவின் இரண்டு கட்சி குழுவுடன் சந்திப்பை நடத்தியதாக குறிப்பிட்ட நிக்கல், அவர்களின் முழு ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதும் ஒரு முக்கிய படியாகும் என்று நிக்கல் கூறியுள்ளார். இதற்கான தரவுகள், ஆதாரங்கள் தெளிவாக உள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது சுயசரிதையில் இலங்கையில் நடக்கும் வெளிப்படையான இனப்படுகொலையில் ஐக்கிய நாடுகளின் ஆதரவு இல்லாததை குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு முக்கியமான முதல் பகுதி என்று தாம் நினைப்பதாக நிக்கல் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்பு பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிக்கல் அந்த வாக்கெடுப்பு இலங்கையில் நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles