NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கால்பந்தில் மோசடி

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை விளையட்டுத்துறை அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் கடந்த காலங்களில் 30க்கும் மேற்பட்ட ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை கடந்த திங்கட்கிழமை அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரனசிங்க, அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஊடக சந்திப்பொன்றில் பங்கேற்று இது குறித்து விளக்கமளித்தார். இதன்போதே அவர் ஊழல், மோசடிகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சரினால், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி குசலா சரோஜனி தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த விசாரணை குழுவில் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சுகத் நாகமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் மற்றும் முன்னாள் வீரரான சுசில் ரோஹன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ரொஷான் ரனசிங்க,

“இலங்கை கால்பந்து சம்மேளனத்தைப் பொறுத்தவரை, அதன் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பன குறித்து இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை என்னிடம் அளிக்கும் போது, ​​சங்கத்தில் 30க்கும் மேற்பட்ட ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பதாக விசாரணைக் குழுவின் தலைவர் விளக்கம் அளித்தார். மேலும், மிகப் பெரிய தொகை பணம் செலவிடப்பட்டாலும் விளையாட்டின் அபிவிருத்திக்காக அல்லது வீரர்களுக்காக அதில் 2% கூட செலவிடப்படவில்லை.

மேலும், வைப்பில் இடப்பட்டிருந்த 100 மில்லியன் தொகையுடன் நிர்வாகிகள் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கடந்த 10 வருட காலத்தைப் பார்த்தோம் என்றால் கால்பந்து உட்பட அனைத்து முக்கிய விளையாட்டுகளும் பின்னோக்கிச் சென்றுவிட்டன, எதுவும் முன்னேரவில்லை.

விளையாட்டை சரிசெய்ய, விளையாட்டிலிருந்து ஊழலை அகற்ற வேண்டும். இந்த அறிக்கையை ஆய்வு செய்து விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன். இந்த அறிக்கையில் தவறு செய்தவர்கள் என குறிப்பிடப்படுபவர்களுக்கு இதன் பின்னர் கால்பந்தில் பணியாற்ற இடமளிக்க மாட்டோம்” என்றார்.

இந்த அறிக்கையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஊழல்கள் தொடர்பில் தகவல் கொடுத்த இருவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles