(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான தேர்தலை நடத்த மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடைபெற்றிருந்ததுடன், புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு ஆதரவாக 27 வாக்குகள் கிடைக்கப்பெற்றதுடன், இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜகத் ரோஹன 24 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
எனினும், 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கடந்த மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டமையால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் கால்பந்து சம்மேளனத்துக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக மீண்டும் தேர்தலை நடத்த விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்காக மூவர் அடங்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளார்.