(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை சிங்களவர்களின் நாடு எனவும் தமிழர்களுடையது அல்லவென்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் விகாரைகள் அமைப்பதை தடுக்க நினைப்பவர்களின் தலைகளை வெட்டுவேன் என அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அவர் மீண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று (15) செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘நாம் இந்த நாட்டைச் சொந்தம் கொண்டாடும் சிங்களவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. புத்தரின் தத்துவத்தால் தான் அனைத்து தேசங்களுடனும் கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்று நம்புகிறோம். நாம் எந்த இனத்திற்கும், மதத்திற்கும் எதிரானவர்கள் கிடையாது. ஆனாலும் இந்த நாடு சிங்களவர்களுடையது. தமிழர்கள் உரிமை கோர முடியாது.
பௌத்த தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் என்ற வகையில் நீங்கள் விரும்பினால் எங்களுடன் இணைந்து பயணிக்க முடியும். எமக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பாகுபாடு கிடையாது. இலங்கையில் வாழும் அனைவருக்கும் கோவில்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைக்க உரிமையுண்டு.
நாம் விகாரைகளை அமைக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? தமிழர்களிடம் அனுமதி கேட்க வேண்டுமா? நம் அரசர்கள் இந்தியாவிலிருந்து பெண்களை அழைத்து வந்தனர். அந்த பெண்களுடன் அவர்களது பரிவாரங்களும், உறவினர்களும் வந்தனர். அவர்களின் மதத்தை பின்பற்ற விரும்பியதால் கோவில்கள் கட்டினார்கள். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. நாங்கள் அதற்கு ஆதரவாக இருந்துள்ளோம்.
இந்த நாட்டில் உள்ள அனைத்து மத தளங்களையும் மதிக்க வேண்டும். அனைத்து மதத்தினரும் எமது உறவினர்கள். அவர்கள் அனைவரும் இந்த நாட்டை பற்றி பேச உரித்துடையவர்கள்.
இன்று நாட்டிற்கு பெரும் அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் மலையக மக்கள் முக்கியமானவர்கள், அவர்கள் இந்த நாட்டின் ஒரு பகுதியை கேட்க முடியும். அதனை நான் எதிர்க்க மாட்டேன். எனினும், ஒவ்வொரு தரப்பினரும் இவ்வாறு நாட்டை பிரித்து கேட்கும் போது இலங்கையை பிரிக்க முடியாது.
ஆகையினால் சிங்கள இலங்கையர்களாக நாம் அனைவரும் இந்த நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.