NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இஸ்ரேல் – ஸமாஸ் மோதல் : ஐ.நா அவசர அழைப்பு !

உலகின் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNO), 6 முக்கிய உறுப்பு அமைப்புகளில் முக்கியமானது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA). பொதுசபை, 1945ல் ஐ.நா. கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளை வகுக்கவும், உலக நாடுகளுக்கிடையே சச்சரவு எழும் போது ஐ.நா. சபையின் பிரதிநிதியாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும் உருவாக்கப்பட்டது.

இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் இதன் உறுப்பினர் நாடுகளின் வருடாந்திர சந்திப்பு நடைபெறும்.

உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களால் நெருக்கடி நிலை தோன்றும் போது, அவசியம் ஏற்பட்டால் அவசர சந்திப்புகளுக்கு தன் உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்து பொதுசபை கூடுவதுண்டு.

கடந்த ஒக்டோபர் 7-லிருந்து பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து அவர்கள் பலஸ்தீன காசா பகுதியில் ஒளிந்திருக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 10-வது அவசர சந்திப்பு ஒக்டோபர் 26 அன்று நடைபெறும் என அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) அறிவித்துள்ளார்.

“உறுப்பினர் நாடுகள் அவசர சந்திப்பிற்கு ஐ.நா. பொதுசபைக்கு கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையை ஏற்று 10-வது அவசர கூட்டம் வரும் 26 ஆம் திகதியன்று நடத்தப்படும்” என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் டென்னிஸ் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 பெப்ரவரி மாதம் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா ஆக்ரமித்ததையடுத்து அவசர கூட்டம் நடைபெற்றது.

உலக சூழலுக்கு ஏற்ப 24 மணி நேரத்திலேயே அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பொதுசபைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles