பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி சர்வதேச புவி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே குறித்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு உலக பூமி தினத்தின் தொனிப்பொருள் “பூமி மற்றும் பிளாஸ்டிக்” என்பதாகும்.
உலகில் வேகமாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, காடழிப்பு மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
1970ஆம் ஆண்டளவில் அமெரிக்காவிலுள்ள பல்வேறு நகரங்களிலும் மனித நடவடிக்கைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக, இரண்டு கோடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிரதிபலிப்பாகவே ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் புவி தினம் முதன்முதலாக கடைப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலகளாவிய பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே புவி தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்பேது, இயற்கை வளங்கள் குறைந்து வருவதும் மிகப் பெரிய அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
இன்று, புவி தினத்தில் சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க 193 நாடுகளைச் சேர்ந்த 1 பில்லியன் மக்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இன்று 54ஆவது புவி தினம் கடைப்பிடிக்கப்படும் அதேவேளை, பிளாஸ்டிக் பயன்பாடு இயற்கைக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் EARTHDAY.ORG வலியுறுத்தியுள்ளது.
மேலும், 2040ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியையும் 60% குறைக்க வேண்டும் என்றும் EARTHDAY.ORG கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வெப்பநிலை உயர்வு என்பது எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, உலகில் ஒவ்வொரு நாளும் 700இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் தீவிர மாசடைந்த பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.